டேவிட் லிவிங்ஸ்டன்
(1813-1873)
(ஆப்பிரிக்காவின் முன்னோடி மிஷினரி)
ஸ்காட்லாந்திலே க்ளாஸ்கோவுக்கு ஒன்பது மைல் தூரத்தில் டேவிட் லிவிங்ஸ்டனுக்கு ஒரு பெரிய ஞாபகார்த்த மண்டபம் உள்ளது. அதிலே அந்த தேவ மனிதன், ஆப்பிரிக்காவில் தங்கியிருந்து வருஷக்கணக்காக ஜெபித்து ஊழியம் செய்து வந்த அவரது வீட்டு மாடல் ஒன்று இருக்கிறது. அதைப் பார்த்தால் இந்தியாவில் கூரை வேய்ந்த சிறு குடிசை மாதிரி ஒரு சிறிய வீடு. அதிலே ஒரு சிறிய கட்டில்.அது கட்டில் கூட அல்ல. இரண்டு மூங்கில் கம்புகளுக்கு நடுவில் இலைகளை வைத்துத் தைத்த ஒரு படுக்கை..பக்கத்தில் ஒரு மெழுகுவர்த்தி எரிகிறது. அதின் அருகில் டேவிட் லிவிங்ஸ்டன் முழங்காலில் ஜெபிக்கிற ஒரு மாதிரியை செய்து வைத்திருக்கின்றனர்.அந்தக் குடிசையில் ஒவ்வொரு இரவும் தன் கைகளை உயர்த்தி
"தேவனே இந்த உலகத்தின் பாவத்தின் ரணங்கள் குணமாகாதோ??"
என்று கதறி ஜெபித்தார் அந்த தேவ மனிதர்.
ஆப்பிரிக்காவில் அடிமை வியாபாரம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த அந்த நாட்களில் போர்ச்சுக்கீசியருக்கு எதிருக்கு எதிர் சமர் நின்றாா் லிவிங்ஸ்டன். இன்னும் அந்த மனிதர் பட்ட பிரயாசங்களும் அலைச்சல்களும் வனவிலங்குகளிடம் பட்ட காயத்தின் தழும்புகளும் தேவனின் ஞாபகப்புத்தகத்தில் அல்லவோ இருக்கிறது !!
ஒரு முறை காட்டில் சிங்கம் தாக்கி அவரது முகத்தாடையின் ஒரு பக்கமே சேதமானது..
ஏன் இதெல்லாம்?
அவரும் ஒரு கெத்சமெனியின் அனுபவத்தினூடே கடந்து சென்றார். தனக்கென்று கொடுக்கப்பட்ட கசப்பான பாத்திரத்தில் நிச்சயமாகவே பானம் பண்ணினார் லிவிங்ஸ்டன். இறந்த தன் அன்பின் மனைவியைத் தன் கையாலேயே காட்டில் அடக்கம் பண்ணினார். அவர் பெற்ற பிள்ளை இறந்தது. அதின் தாயின் அருகில் அதையும் கிடத்தினார். இன்னொரு பிள்ளை இறந்தது. அதையும் தன் கைகளினாலே அடக்கம் பண்ணினார்..
ஆனால் அந்தத் துக்கத்தின் திரளான வெள்ளம் அவருக்குள் இருந்த நேச அக்கினியை அவித்துப் போட முடியவில்லை. மாறாக அந்த துக்கம் அவருக்குள் இருந்த அக்கினியைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் எரிபொருளாகவே மாறியது.
பிசாசு அவரது வேலையை தடை செய்யச் செய்யத் தன் ஜெபத்தைக் கூட்டினார் லிவிங்ஸ்டன். இரவெல்லாம் அவரது ஜெபத்தின் கதறுதல் அந்த ஆப்பிரிக்க் காடுகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
"தேவனே,இந்த உலகத்தின் பாவத்தின் இரணத்தைக் குணமாக்க மாட்டீரோ ?"
இப்படியும் ஒரு மனிதனா?
ஸ்காட்லாந்தின் Blantyre நகரம்.. 1813..
பக்தியுள்ள ஒரு குடும்பத்தில் பிறக்கிறார் லிவிங்ஸ்டன்..
விபரம் தெரியவந்த வயதுகளில் ஒன்றில், "தேவனுக்காக சாதனை படைத்த பத்து மிஷினரிகள்" என்ற வரலாற்றுப் புத்தகம் ஒன்றைக் கொடுத்து, "முழங்காலிலேயே இதைப்படி.." என்கிறார் அவரது தகப்பனார். அதில் Butalaf என்ற டென்மார்க் மெடிக்கல் மிஷினரி ஒருவரின் வரலாறு அந்த சிறு பையனின் மனதை ஆழமாய்த் தொட, "ஒரு நாள் நானும் இவரைப் போலவே டாக்டரும் மிஷினரியும் ஆவேன்.." என்று தன் தகப்பனாரைப் பார்த்துச் சொல்கிறார் சின்ன லிவிங்ஸ்டன்.
தன் முழங்காலிலேயே வளர்ந்த அந்த வாலிப நாட்களில் ஒரு நாள் இப்படி ஜெபிக்கிறார்.."ஆண்டவரே, நீர் அனுப்பும் எங்கு வேண்டுமானாலும் நான் செல்வேன், ஆனால் நீர் மட்டும் என்னோடு வர வேண்டும்...ஆண்டவரே, எப்பேர்ப்பட்ட உமது பாரத்தையும் என் மேல் வையும் - ஆனால் நீர் மட்டும் என்னைத் தாங்கினால் போதும்.. ஆண்டவரே, எப்படிப்பட்ட உலகப் பிணைப்புகள் என்னில் இருந்தாலும், எல்லாவற்றையும் அறுத்து எறிந்துவிடும் - உம்முடைய இருதயத்தோடும், நீர் என்னை நம்பி ஒப்படைக்கும் உமது ஊழியத்தோடும் மாத்திரமே நான் கட்டப்பட்டிருப்பேனாக!"
இந்த ஜெபத்தை ஏறெடுத்து முடித்த மாத்திரத்திலேயே, "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தமும் ஆகல நாட்களிலும் நான் உன்னுடனேகூட இருக்கிறேன்" என்ற வார்த்தை அவரது செவிகளில் அசரீரியாய் தொனிக்க. உடனே புறப்பட்டார் இருண்ட கண்டமாகிய ஆப்பிரிக்காவுக்கு...
ஆப்பிரிக்காவில் தான் கால் வைத்த அந்த முதல் நாள் காலை அனுவத்தைத் தன் டைரிக்குறிப்பில் அவர் எழுதுகிறார்..
"ஓ! அந்த நாளின் காலை சூரியக்கதிர்கள் அதோ தூரமான அந்த ஆயிரக்கணக்கான கிராமங்கள் மேல் விழ, கிராமங்களின் அடுப்புகளிலிருந்து மேலெழும்புகையும் நெருப்பும் என் இருதயத்தை அந்த ஜனங்களுக்காக அக்கினியாய்க் கொழுந்துவிட்டு எரியச் செய்தது.."
அவர் மணந்தது, இங்கிலாந்தின் புகழ்பெற்ற மொஃபட் குடும்பத்துப் பெண் மேரியை..மேரியின் தகப்பனாரும் ஒரு மிகச்சிறந்த மிஷினரியே!
லிவிங்ஸ்டனின் ஊழியம், இயேசுவை அறியாத ஆயிரமாயிரம் ஆப்பிரிக்கர்களுக்கு அவரை அறிவிப்பதோடு ஆப்பிரிக்காவின் கண்டுபிடிக்கப்படாத பரந்து விரிந்த நிலப்பரப்புகளையும் எல்லைகளையும் ஆய்வு செய்து கண்டுபிடிப்பதுமாகவே இருந்தது.. இதில் அவர் செய்த நீண்ட பிரயாணங்களும் பட்ட கஷ்ட நஷ்டங்களும் கொஞ்சநஞ்சமல்ல.. இடம் விட்டு இடம் பெயர்ந்து பயணப்பட்டுக் கொண்டே இருந்த அவரது ஆய்வுப்பணிக்கும் பிரயாணங்களுக்கும் ஈடு கொடுக்க முடியாத அவரது பச்சிளங்குழந்தைகள் அடுத்தடுத்து நோயினால் மரிக்க...இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட தன் இளம் மனைவியைப் பார்த்து ஒரு நாள் லிவிங்ஸ்டன் சொன்னார்... "மேரி! நீ இப்போதைக்கு இங்கிலாந்துக்குத் திரும்பிப் போய், மீதியிருக்கும் பிள்ளைகள் சற்று வளரும் வரை அவர்களைக் கவனித்துக் கொள்..நான் சீக்கிரமே வந்து உன்னைச் சந்திப்பேன்.." என்று சொல்லிவிட்டு அவர்களைத் தனது தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்..
ஐந்து வருடங்கள் கழிகிறது...
தானும் சில நாட்களுக்காக இங்கிலாந்து வருகிறார்.. மனைவியும் கூட அவரை அடையாளம் காண இயலாத அளவு ஐந்து வருடங்களில் அவரது முகரூபமே மாறிப்போயிருந்தது.. காட்டுமரம் ஒன்று அவர் மேல் விழுந்து ஒரு பக்கம் சேதமாயிருக்க, இன்னொரு தோள்பட்டையில் சிங்கம் ஒன்று பாய்ந்து அதினால் தோள் எலும்பு முறிந்து தாடை ஒன்றும் ஒரு பக்கம் சரிந்து போயிருந்தது. ஆப்பிரிக்கப் பேய் வெயிலில் சிவந்த மேனி கறுகறுத்து அடையாளம் தெரியாமல் உருமாறிப் போயிருந்தார் லிவிங்ஸ்டன்..
தன் மனைவியை சந்திக்க வரும் சற்று முன்பு தான் தன் தகப்பனாரையும் சந்திக்கச் சென்றிருந்தார் அவர்..ஆசையோடும் கனவுகளோடும் தன் ஆப்பிரிக்க அனுபவங்களைத் தன் சொந்த வாயால் அவரிடம் ஆவலாய் விவரிக்கச் சென்றவர் கண்டதோ...அந்தோ! தன் தகப்பனாரிடம் போய்ச்சேரும் அன்று சற்று முன்னர், தகப்பனார் தேவனிடம் போய்ச் சேர்ந்து விட்டிருந்தார். நெஞ்சு நிறைந்த தன் மிஷினரி அனுபவங்களைத் தனக்குள்ளே புதைத்து விட்டவராய், தன் கைகளினாலேயே அன்று தன் தகப்பனாரை அடக்கம் செய்து புதைத்த அவரது வேதனையை யார் அறிவார்?
மறுபடியும் ஆப்பிரிக்கா தன்னை அறைகூவி அழைக்க, மனைவி மக்களிடம் விடைபெற்றுக் கொண்டு,"பிள்ளைகள் பெரியவர்களாகும் வரை நீ அவர்களைக் கவனித்துக் கொள்.." என்று சொல்லி அவர்களை முத்தமிட்டுத் திரும்பினார், தன் இதயம் இருந்த இருண்ட தேசத்துக்கு...
நீண்ட காலத்துக்குப் பின் அவரது மனைவி அவரோடு இருக்க ஆப்பிரிக்கா வந்து சேர, அவர் ஆப்பிரிக்காவில் கால் வைத்த அன்றே, பயங்கரமான வியாதியால் பாதிக்கப்பட்டு, சில நாட்களிலேயே மரித்துப் போகிறார் மேரி. அப்போது லிவிங்ஸ்டனை சாட்சியாகக் கண்ட ஒருவர் சொல்கிறார்...
"என் இயேசுவே! என் ராஜனே! என் ஜீவனே! என் சகலமே! மீண்டுமாய் என் வாழ்வை உமக்கு அர்ப்பணிக்கிறேன்..உம்மையும் உமது ஊழியத்தையும் தவிர இவ்வுலகில் எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம்...என் மனதை நான் வேறெதிலும் வையேன்..என்னையே ஒப்படைக்கிறேன்.."
இதைச் சொல்லி முடிக்க... ஆரம்பத்தில் ஒலித்த அதே வார்த்தைகள் மீண்டும் அவரது செவிகளில் ஒலிக்கிறது." "இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உன்னுடனே இருக்கிறேன்.."
ஒரு நாள் அவரது வீட்டிலிருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொண்ட அவரது medical kit திருடு போய் விட்டது. ஜெபிக்க ஆரம்பித்தார் லிவிங்ஸ்டன்.. ஜெபித்துக் கொண்டிருக்கும் போதே, யாரோ ஒரு மனிதர் அவரை சந்திக்க வருகிறார்..
வந்தவர் சொல்கிறார்.." என் பெயர் Henry M. Stanley. லண்டனிலிருந்து அனுப்பப்பட்டு, உங்கள் அனுபவங்களை நேரில் கண்டு புத்தகமாய் எழுத வந்திருக்கிறேன்..என் வேலையை நான் ஆரம்பிக்கு முன் இரண்டு காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லிவிட நினைக்கிறேன். ஒன்று..நான் ஒரு கடவுளை நம்பாத நாஸ்திகவாதி.. எக்காரணம் கொண்டும் என்னை நீங்கள் மாற்ற முயற்சிக்கக் கூடாது..
இன்னொன்று..இதோ உங்களுக்காக யாரோ ஒருவர் கொடுத்தனுப்பியிருக்கும் Medical Kit..இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.."
சரியாய் நான்கே மாதங்கள்..
லிவிங்ஸ்டனின் வாழ்க்கையையும் ஜெபத்தையும் கண்ட அந்த Henry Stanley, தன் வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து அந்த ஆப்பிரிக்க மண்ணிலேயே தானும் மரிக்கிறார்..
இதற்குப்பின் மலேரியாவினாலும் இடைவிடாத இரத்தப் போக்கினாலும் பெலவீனப்பட்டு படுத்தபடுக்கையாகிறார் லிவிங்ஸ்டன்.அவரைக் கிராமத்துக்குக் கிராமம் ஸ்ரெட்சர் மாதிரி செய்யப்பட்ட ஒன்றிலே தூக்கிக் கொண்டே செல்கின்றனர். அந்நிலையிலும் விடாது இயேசுவை அறிவிக்கிறார் அவர்..
லிவிங்ஸ்டனின் கடைசி நிமிடங்கள்
ஒரு நாள் தானிருந்த ஊருக்குத் திரும்பிவந்த லிவிங்ஸ்டன், இனிமேல் எங்கும் செல்ல இயலாத நிலைக்கு ஆளாகி, ஒரு இரவு தன்னோடு இருந்தவர்களிடம்,"என்னை முழங்காலில் நிறுத்தி வையுங்கள் என்கிறார். அந்த நிலையிலும் ஜெபிக்கிறார்.."தேவனே! இந்த உலகத்தின் பாவத்தின் இரணத்தைக் குணமாக்கமாட்டீரோ?"
அந்த இரவு நேர நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு அந்த ஆப்பிரிக்கக் காடுகளில் அவரது ஜெபம் எதிரொலிக்கிறது. அவரோ நெடுநேரம் முழங்காலிலேயே அசைவின்றி நிற்கிறார்..
அவரைப் படுக்க வைக்க உடனிருந்தவர்கள் அவரைத் தாங்கிய போது தான் தெரிந்தது.. ஜெபநிலையிலேயே முழங்காலில் அவர் பிரிந்து விட்டதென்று..
இன்றைய Zambia வும் அன்றைய வடக்கு ரோதேஷியாவுமான அந்த நாட்டின் சிட்டாம்பு கிராமத்திலேயே தான் நேசித்த அந்த ஆப்பிரிக்க மண்ணிலே அவரது இதயம் புதைக்கப்பட, அவரது சரீரமோ இங்கிலாந்தின் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்யப்படும் WEST MINISTER ABBEY யில் இங்கிலாந்தின் ராஜமரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது..
லிவிங்ஸ்டனின் கடைசி வார்த்தைகள்
"என் தனிமையிலே என்னால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்றே! அமெரிக்கனோ, ஆங்கிலேயனோ, துருக்கியனோ அது யாராயினும் இவ்வுலகத்தின் பாவ இரணத்தைக் குணமாக்க உதவுபவர் யாராயிருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவர் மேலும் பரலோக ஆசீர் நிறைவாய்ப் பொழிவதாக!
டைரியில் எழுதி வைத்துவிட்டு ஜெபநிலையிலேயே ஜீவன் பிரிகிறது ...
பிறப்பு : 1813
இறப்பு : 1873